இதன் பொருள், இந்த திருவாதிரையின் பிரகாசத்தில் நாம் காணும் மாற்றங்கள் உண்மையிலேயே நடந்து முடிந்து 724 ஆண்டுகள் ஆகின்றன. இதை வரலாற்றில் வைத்து சொல்வதாக இருந்தால் வட இந்தியாவில் அலாவுதீன் கில்ஜியின் ஆட்சி நிலை பெற்றபோது திருவாதிரையில் நடந்ததையே நாம் இப்போது பார்க்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.
இந்த விண்மீன் எவ்வளவு பெரியது என்று கேட்டபோது, "சுருங்கி விரியும் தன்மையுடைய திருவாதிரையின் ஆரம், சூரியனுடைய ஆரத்தைப் போல 550 முதல் 920 மடங்கு பெரியது. அளவு என்றால் சூரியனைப் போல அது 20 கோடி மடங்கு பெரியது. சூரியனைப் போல 15 மடங்கு அதிக நிறையுடையது. சூரியனைப் போல 5 ஆயிரம் மடங்கு அதிக ஆற்றலை வெளியிடக்கூடியது" என்றார் வெங்கடேஸ்வரன்.
"ஒரு விண்மீன் வீங்கிப் பெருக்கும்போது, அது மொத்தமாக வெளியிடும் ஆற்றல் குறையாது. ஆனால், அதன் பிரகாசம் குறையும். ஒரு சுவற்றின் மீது டார்ச் லைட் அடிக்கும்போது பக்கத்தில் இருந்து அடித்தால் ஒளி பிரகாசமாகவும், தூரத்தில் இருந்தால் மங்கலாகவும் சுவற்றில் தெரியும். ஆனால், டார்ச்சில் இருந்து வெளியாகும் ஒளியின் அளவு மாறுவதில்லைதானே. அதனை ஒப்பிட்டு இதனைப் புரிந்துகொள்ளலாம்.